சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் பங்கேற்றார்.

Update: 2018-08-24 22:51 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

இதில் நகராட்சி நிர்வாகங்களின் மண்டல இயக்குனர் லட்சுமி, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தின் ஆலோசகர் ராமசாமி, மாநகராட்சி செயற்பொறியாளர்கள் அசோகன், கலைவாணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரேவதி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், ஆதிதிராவிடர் அலுவலர்கள், பணியாளர்களின் ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வூதிய பணப்பயன்கள், கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த பணியாளர்களுக்கு தனியாக குறைதீர்க்கும் கூட்டங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை நடத்தி, அவர்கள் தெரிவிக்கும் குறைகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.

மேலும், அவர் பேசுகையில், சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், உபகரணங்களை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி, அனைத்து பணியாளர்களையும் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் நிலையினை, சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16 நபர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 வீதம் ஈமச்சடங்கு மானியத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான காசோலையினையும், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 8 நபர்களுக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையையும் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத்தலைவர் முருகன் வழங்கினார்.

மேலும் செய்திகள்