தமிழகத்தில் ஆட்சி கவிழும் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கவிழும் விடும் என நினைத்தவர்களின் கனவு பலிக்கவில்லை என ஆரணியில் நடந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

Update: 2018-08-24 23:30 GMT
ஆரணி,

திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி நேற்று ஆரணியில் நடந்தது.

இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி - சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சரும், ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ (வடக்கு), பெருமாள் நகர் கே.ராஜன் (தெற்கு), கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எம்.அருள்பழனி, முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செஞ்சி வி.ஏழுமலை, ஆர்.வனரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். 3-வது கட்ட சைக்கிள் பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திச்செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிமுதல் தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.

தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க. ஒன்றரை கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.

இந்த பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு வருகிற 28-ந் தேதி வரை சைக்கிள் பேரணி நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், சு.ரவி, நடிகர் போளூர் ஜெயகோவிந்தன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எல்.ஜெயசுதா, நளினிமனோகரன், தமிழரசன், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் மூவேந்தன், மாநில இணைச் செயலாளர் முகில், வெற்றிவேல், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் வக்கீல் கே.சங்கர், கோவிந்தராசன், நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வேலு, உள்பட பலரும் கலந்துகொண்டனர். முடிவில் ஆரணி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பாரி பி.பாபு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்