குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் தர்ணா

சின்னமுட்லுவில் அணை கட்டக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-24 21:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கி பேசினர்.

இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் விசுவநாதன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசு சின்னமுட்லுவில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு அணையை உடனடியாக கட்ட வேண்டும். அதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.

உபரிநீராக கடலுக்கு செல்லும் காவிரி நீரை முசிறியில் இருந்து தா.பேட்டை, துறையூர் வழியாக பெரம்பலூருக்கு கொண்டு வர வரத்து வாய்க்கால்கள் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் விவசாய சங்கங்களின் சார்பில் பேசுகையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பிற்கான நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்றார். விவசாய சங்க பிரதிநிதி ராஜூ பேசுகையில், வறட்சியால் பயிர்கள் கருகும் சூழ்நிலையில் உள்ளதால் விவசாயிகளுக்கு கடன் கொடுத்த வங்கிகள், கடன் கட்டுவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கை.களத்தூரில் ஏரியின் தடுப்புச்சுவரை உயர்த்தி கட்ட வேண்டும் என்றார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் சங்கத்தின் மாநில நிர்வாகி ராஜேந்திரன் பேசுகையில், போதிய தண்ணீர் இல்லாததால் பயிரிட்டுள்ள கரும்புகள் வாடியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார். பெரம்பலூர் சர்க்கரை ஆலை பங்குதாரர்கள் மற்றும் கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் மழைமானி வைக்க வேண்டும். பெரம்பலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை 2-ஆக பிரித்து குன்னம் தாலுகாவில் உள்ள துங்கபுரத்தில் புதிதாக அரசு போக்குவரத்து கழக பணிமனை தொடங்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் விவசாயிகள் பலர் பேசுகையில், பெரம் பலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கேற்றவாறு தங்களுக்கு வசதியாக உள்ள கரும்பு ஆலையினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்,பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை உடனடியாக போக்கிடவும், விவசாயிகளுக்கு தேவையான இயற்கை உயிர் உரங்களை கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக இருப்பு வைக்கப்பட்டு தடையின்றி கிடைத்திடவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் பஞ்சாயத்து துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் வரத்து வாய்க்கால்களை சரி செய்திடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் சாந்தா, விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை சார்பில் எந்திரமயமாக்கல் திட்டம் குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி், வேளாண்மை இணை இயக்குனர் கனகசபை, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்