மதகுகள் உடைந்த இடத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகள் தொடங்கின

முக்கொம்பு மேலணையில் மதகுகள் உடைந்த இடத்தில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நேற்று தொடங்கின. இதனை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சீரமைப்பு பணிகளை 4 நாட்களில் முடிக்க உத்தரவிட்டார்.

Update: 2018-08-24 23:15 GMT
திருச்சி,

திருச்சி-கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மேலணைக்கு கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி தண்ணீர் வந்தடைகிறது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்ட டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மட்டும் முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் கலந்து வருகிறது. கொள்ளிடம் தடுப்பணையில் தென்பகுதியில் 45 மதகுகள் உள்ளன. வடபகுதி 10 மதகுகளை கொண்டதாகும். ஒவ்வொரு மதகின் நீளம் 12 மீட்டர்.

இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு முக்கொம்பு மேலணை பகுதியில், கொள்ளிடம் பாலத்துடன் கூடிய அணையில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் உடைந்து கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விட்டன. சேதமடைந்த பகுதியின் மொத்த நீளம் 108 மீட்டர் ஆகும். காவிரி ஆற்றில் மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து பெருமளவு குறைந்ததால் தற்போது முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்து விட்டது.

இதனால், காவிரி ஆறு மூலமாக திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விவசாயத்துக்கு செல்லும் நீரில் எந்த பிரச்சினையும் இல்லை. தேவையான அளவு தண்ணீரை வெளியேற்றுவதற்கான வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுவதற்காகவே கொள்ளிடம் ஆறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தற்போது 9 மதகுகள் உடைந்தாலும் உபரிநீர் வெளியே செல்வதில் எந்த சிரமும் இல்லை. குறைந்த அளவே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறி வருவதால் கரையோர கிராம மக்களுக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை.

இந்தநிலையில் கொள்ளிடம் தடுப்பணை இடிந்து விழுந்த பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் நேற்று முதல் மேற்கொண்டனர். சீரமைப்பு பணிக்காக ரூ.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மணல் நிரப்பிய சாக்கு மூட்டைகள் தயார் செய்யப்பட்டு, அவை டிராக்டர் மூலம் கொள்ளிடம் தடுப்பணையின் இடிந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு மணல் நிரப்பிய சாக்குமூட்டைகளை அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இதன் மூலம் கொள்ளிடம் ஆற்றில் வீணாக செல்லும் தண்ணீர் ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதகுகள் உள்ள இடத்தில் சவுக்கு கட்டைகள் வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக தற்போதுள்ள மதகுகளில் சிக்கி இருந்த கழிவுப்பொருட்கள், தண்ணீர் செல்ல இடையூறாக இருந்த கம்புகள் மற்றும் செடி, கொடிகளை தொழிலாளர்கள் ஆற்றுக்குள் இறங்கி வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் பொக்லைன் எந்திரமும் ஆற்றில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் கொள்ளிடம் தடுப்பணை ஆற்றுப்பகுதிக்குள் இறங்கி செல்லும் அளவுக்கு தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிக்காக எம்.ஆர்.பாளையம், தொட்டியம், திருச்சி, ஜீயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் அழைத்து வரப்பட்டு பணிகளை மேற்கொண்டனர். இந்த பணிகளை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்த தற்காலிக சீரமைப்பு பணிகளை நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, காமராஜ், துரைகண்ணு, எம்.பி.க்கள் குமார், ரத்தினவேல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்து கட்டியபடி, கொள்ளிடம் ஆற்றில் மதகுகள் உடைந்து அடித்து செல்லப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கு தயாராக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை விரைவாக மதகுகள் உடைந்த இடத்தில் அடுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘தற்காலிக சீரமைப்பு பணிகளை இன்னும் 4 நாட்களில் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்து கண்காணித்து பணியை துரிதப்படுத்தி வருகிறார்கள்” என்றார்.

மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் மாயனூர் கதவணை வழியாக திருச்சி முக்கொம்புக்கு வருகிறது. நேற்றைய நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து காவிரி ஆற்றில் 15,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 10,600 கன அடி தண்ணீர் உடைந்த மதகுகள் வழியாக செல்கிறது. இதுதவிர புள்ளம்பாடி, அய்யன் வாய்க்கால் உள்பட 17 கிளை வாய்க்கால்களில் 1,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்