கூட்டுறவு தேர்தலில் இரு கோஷ்டியாக அ.தி.மு.க. மோதல்; ஓட்டுப்பெட்டி உடைப்பு, சுவர் ஏறிக்குதித்து அதிகாரிகள் ஓட்டம்

திருமங்கலம் கூட்டுறவு சங்கத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் இருகோஷ்டியாக மோதிக்கொண்ட சம்பவத்தில் ஓட்டுப்பெட்டிகள் உடைக்கப்பட்டன. இதனால் தேர்தல் அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தனர்.

Update: 2018-08-24 23:00 GMT

திருமங்கலம்,

மதுரை திருமங்கலம் கூட்டுறவு சங்கத் தேர்தலில் 11 இயக்குனர்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த திருமங்கலம் நகராட்சி முன்னாள் தலைவர் நிரஞ்சன் போட்டியிட்டார். அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயன் சார்பில் அழகர் போட்டியிட்டார். இந்த நிலையில் கடந்த 21–ந்தேதி நடைபெற்ற தேர்தலின் போது இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டதால், அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று மீண்டும் தேர்தல் நடந்தது. இதையொட்டி முன்எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்கு போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். தேர்தல் அதிகாரி அறிவரசு கண்ணன் தலைமையில் அதிகாரிகள் தேர்தல் பணியில் இருந்தனர்.

அப்போது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் இருகோஷ்டிகளாக திடீரென தகராறில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். ஆனால் வாக்குவாதம் முற்றி மோதலானது.

ஆவேசம் அடைந்த ஒரு தரப்பினர் வாக்குப்பதிவு நடைபெறும் அறைக்குள் புகுந்து ஓட்டுப்பெட்டிகளை அடித்து நொறுக்கினர். வாக்குச் சீட்டுகளையும் கிழித்து எறிந்தனர். இதனால் அச்சம் அடைந்த தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி, காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து தப்பி ஓடினர்.

இதையடுத்து நிரஞ்சன் தனது ஆதரவாளர் 40 பேருடன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதுகுறித்து நிரஞ்சன் கூறுகையில், “துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு எதிராக செயல்படும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதவி விலக வேண்டும்“ என்றார்.

இது குறித்து நகர செயலாளர் விஜயன் கூறுகையில், “தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இருவரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான். நாங்கள் யாரும் ஓட்டு பெட்டிகளை உடைத்து சேதப்படுத்தவில்லை. தகராறில் ஈடுபடவும் இல்லை“ என்றார்.

இதையடுத்து நேற்றும் அந்த கூட்டுறவு சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது. மோதல் தொடர்பாகவும், ஓட்டுப்பெட்டியை உடைத்தது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்