பாளையங்கோட்டை சிறையில் கைதி திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்–பரபரப்பு

பாளையங்கோட்டை சிறையில் கைதி திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-08-24 21:00 GMT

நெல்லை, 

பாளையங்கோட்டை சிறையில் கைதி திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கைதி

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 45). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதில், கணேசன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். கணேசனை ஜாமீனில் எடுக்க அவருடைய உறவினர்கள் முயற்சி செய்து வந்தனர்.

திடீர் சாவு

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதி சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்று நெல்லை உதவி கலெக்டர் மைதிலி விசாரணை நடத்தி வருகிறார்.

போராட்டம்

இந்த நிலையில், இறந்த கைதி கணேசனின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்