உலகை மயக்கிய உருளை சிப்ஸ்!
உருளை சிப்ஸ் பிறந்த நாளில் அதைப்பற்றிய சில சுவையான சங்கதிகளை தெரிந்து கொள்வோமா...
உருளை கிழங்கு சிப்ஸிற்கு இன்றுதான் பிறந்த நாள். சுமார் 164 ஆண்டுகளுக்கு முன்பு, ஆகஸ்டு 24-ந்தேதிதான் முதன்முதலில் உருளை சிப்ஸ் தயாரித்து அறிமுகம் செய்யப்பட்டது.
1853-ல் ஆகஸ்டு 24-ந் தேதி அமெரிக்கரான ஜார்ஜ் கிரம் என்பவர் நியூயார்க் அருகே சராடோகா ஸ்பிரிங் பகுதியில் உருளைக் கிழங்கு சிப்ஸ் செய்து அறிமுகம் செய்தார். இதன் மூலம் அவர் உலகப்புகழ்பெற்ற ‘செப்’ ஆக பிரபலமானார்.
தனியே சிப்ஸ் செய்வதற்கு முன்பாக உருளையில் விதவிதமான சமையல் செய்வது பற்றிய குறிப்புகள் இருந்துள்ளன. வில்லியம் கிட்சினர் 1817-ல் எழுதிய சமையல் புத்தகத்தில் உருளைக் கிழங்கை வெட்டி வறுத்து சமைக்கும் உணவுப் பதார்த்தம் பற்றிய குறிப்பு உள்ளது.
ஆரம்ப காலத்தில் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் எண்ணெயில் பொரிக்கப்படவில்லை. தீயில் சுட்டு அல்லது கரி அடுப்பில் சமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டன.
ஆரம்ப கால சிப்ஸ்கள், சுவையூட்டும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமல் இருந்தன. பின்னர் புளிப்பு, காரம் சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை வெங்காயத்துடன் சேர்த்து பரிமாறும் பழக்கம் ஏற்பட்டது.
19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் தயாரித்து விற்கும் நிறுவனங்கள் அமெரிக்காவில் உருவாகின.
உருளைக் கிழங்கு சிப்ஸ் தயாரிக்கப்பட்டு 100 ஆண்டுகள் கழிந்த நிலையில்தான் அவற்றை பொட்டலத்தில் அடைத்து விற்கும் வழக்கம் ஏற்பட்டது. லாரா ஸ்கட்டர் என்பவர் 1953-ல் உருளைக் கிழங்கு சிப்ஸ்களை பொட்டலத்தில் அடைத்து விற்பனைக்கு கொண்டுவந்தார். அதற்கு முன்பு மர டப்பாக்கள், கண்ணாடி உருளைகளில் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டிற்கு 84 கோடி கிலோ உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் சாப்பிடப்படுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சராசரியாக ஒரு நபர் ஆண்டிற்கு சுமார் 3 கிலோ சிப்ஸ் சாப்பிடுகிறாராம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2013-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி உலகின் மிகப்பெரிய உருளைக் கிழங்கு சிப்ஸ் பொட்டலத்தை தயாரித்து சாதனை படைத்தது. இது 1141 கிலோ எடை கொண்ட ராட்சத ‘பாக்கெட்’டாக இருந்தது.
உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் உடல் பருமனை உருவாக்கும் உணவுப்பொருட்களில் ஒன்றாக விளங்குகிறது. அதிக அளவுள்ள கொழுப்புச் சத்து மற்றும் தொடர்ந்து உண்ணும் அடிமைத்தனப் பண்பு இந்த உடல்பருமனை உருவாக்குகிறது.
இங்கிலாந்தில் சிப்ஸ் என்பதற்குப் பதில் ‘கிரிஸ்ப்ஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். வறுக்கும் உணவுப் பொருளைத்தான் அவர்கள் ‘சிப்ஸ்’ என்பார்கள்.
சுமார் 100 விதங்களில், 50 சுவைகளில் சிப்ஸ்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நீங்கள் எத்தனை வித சுவையில் உருளை சிப்ஸ் ருசித்திருக்கிறீர்கள்?
ஜப்பானில் குளிர்பான சுவை ஏற்றிய உருளை சிப்ஸும், போலந்தில் ‘கிரீம்’கள் தடவிய சிப்ஸ்களும், ரஷியாவில் ஸ்டிராபெர்ரி தடவிய சிப்ஸ்களும், ஐரோப்பாவில் வேர்க்கடலை பொதிந்த உருளை சிப்ஸ்களும் பிரபலமாகும்.
வாயில் வைத்ததும் பஞ்சுமிட்டாய் போல கரையும் உருளை சிப்ஸ்களும் சந்தைப்படுத்தப்படுகின்றன. இவை அதிக கொழுப்புச்சத்தும், ஆற்றலும் நிரம்பியதாகும். 21 சிப்ஸ்களிலேயே 150 கலோரி ஆற்றலும், 10 கிராம் கொழுப்பும் உடலில் சேர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 2 கிலோ உருளை இருந்தால்தான் தரமான அரை கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
அமெரிக்க தேசிய கால்பந்து போட்டியின்போது மட்டும் ஆண்டுதோறும் சுமார் 1.3 கோடி கிலோ உருளை சிப்ஸ்கள் விற்றுத் தீர்கின்றன.
உருளைக் கிழங்கு சிப்ஸின் சராசரி தடிமன் 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லி மீட்டராகும்.
அமெரிக்காவில் ‘த வோல் ஷாபேங்க்’ எனப்படும் ஒருவகை உருளை சிப்ஸ்கள் ஜெயில் கைதிகளுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதற்கு ‘ஜெயில் சிப்ஸ்’ என்று மற்றொரு பெயருண்டு.
2010-ம் ஆண்டு ஒரு நிறுவனம் புதிய உருளை கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டை அறிமுகம் செய்தது. அதை திறக்கும் போதும், கசக்கும்போதும் 95 டெசிபல் இரைச்சல் ஏற்பட்டதாம். இது ஒரு மோட்டார் பைக் ஏற்படுத்தும் இரைச்சலைவிட அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டதால் உடனே அந்த வகை பாக்கெட் தடை செய்யப்பட்டது.
உருளை சிப்ஸ்கள் எளிதில் உடையக்கூடியவை. இப்படி அதிக அளவிலான சிப்ஸ்கள் வீணாவதை அறிந்த நிறுவனம் ஒன்று ‘பெயில் சிப்ஸ’் என்ற பெயரில் உடைந்த சிப்ஸ்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. அது நல்ல வரவேற்பை பெற, நல்ல சிப்ஸ்களையும் உடைத்து விற்பனைக்குவிட்டார்கள்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் உலக உருளை சிப்ஸ்களின் தாயகம் என போற்றப்படுகிறது. இங்குதான் உலகில் அதிக அளவில் உருளை சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது.
முக்கோண வடிவ உருளைக் சிப்ஸ்களை டோரிடோ என்கிறார்கள்.
அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வித்தியாசமான உடல்நல கோளாறு ஏற்பட்டது. அவர் சாப்பிட்ட உருளைக் கிளங்கு சிப்ஸ்கள், அவரது உடலில் வெகு விரைவில் ஆல்கஹாலாக மாறி பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வித்தியாசமான நோய்க்கு ‘ஆட்டோ பிரிவரி சிண்ட்ரோம்’ என பெயர் சூட்டி ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.
டெக்சாஸ் மகாணத்தில் டோரிடோ சிப்ஸ் மாநில கொறிக்கும் பண்டமாக அங்கீகரிகப்பட்டு உள்ளது.
உலகம் முழுவதும் தியேட்டர்களில் அதிகமாக ருசிக்கப்படும் பண்டம் என்றால் அது உருளைக் சிப்ஸ் மற்றும் பிரெஞ்சு பிரைதான்.
2022-ல் உலகம் முழுவதும் உருளைக் கிழங்கு சிப்ஸ் வர்த்தகம் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.