கல்விக்கடன் கேட்பவர்களை திசை திருப்பி அனுப்பக்கூடாது
கல்விக்கடன் கேட்டு வருபவர்களை வங்கியாளர்கள் திருப்பி அனுப்பாமல் அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் கூறினார்.
வேலூர்,
வேலூர் மாவட்ட மகளிர் திட்டம் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் கிராமப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு 2018-2019-ம் ஆண்டு ரூ.492 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கடனை வழங்குவதற்கு பயனாளிகளை எப்படி தேர்வு செய்வது, அவர்களுக்கு எவ்வாறு எளியமுறையில் கடன் வழங்குவது என்பது குறித்து வங்கியாளர்களுக்கு 9 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் முதல்கட்ட பயிற்சி நேற்று வேலூரில் நடந்தது.
இதனை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
வங்கி மூலம் கடன் வழங்குவது குறித்து அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு அதிகாரி ஒரே ஊரில் வேலை பார்ப்பது இல்லை. அதனால் புதிதாக வரும் அதிகாரிகள் மாவட்டத்தை பற்றி தெரிந்து கொள்வதற்காக இதுபோன்ற பயிற்சிகள் நடத்தப்படுகிறது. மற்றவர்கள் வேலையை பார்க்காமல் நமது வேலையை நாம் பார்க்க வேண்டும். ஆனால் நாம் நமது வேலையை விட்டுவிட்டு மற்றவர்கள் வேலையைத்தான் பார்க்கிறோம்.
கல்விக்கடன் கேட்டு வருபவர்களை வங்கியாளர்கள் திசைதிருப்பி அனுப்புகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை சிதறடிப்பார்கள். இந்த நிலை அனைத்துத் துறைகளிலும் உள்ளது. கடன் கேட்பவர்களை திருப்பி அனுப்பக்கூடாது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கல்விக்கடன் கேட்டு அதிக மனுக்கள் வருகிறது.
அதை நான் வங்கிகளுக்கு அனுப்பி வைத்தால் மதிப்பெண்கள் குறைவாக இருக்கிறது. கல்விக்கடன் வழங்க முடியாது என்று வங்கியாளர்கள் எனக்கே மனுவை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் மகளிர்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அனைத்துவிதமான தொழில்களுக்கும் வங்கியாளர்கள் கடன் வழங்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு அதிகம்பேர் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தொழில் தொடங்க அதிக கடன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த ஆண்டும் கடன் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில மகளிர் மேம்பாட்டு கூடுதல் இயக்குனர் வீரணன், முன்னோடி வங்கி மேலாளர் முருகேசன், முதன்மை பயிற்றுனர் ரமேஷ், மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.