நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-08-23 23:31 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பொன்னேரி நாரணம்பேடு ஜி.என்.டி. சாலையை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 44). எலக்ட்ரீசியன். இவர் அரசு பள்ளி ஆசிரியையான காந்தி என்ற காந்திமதி (38) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

பரமசிவத்துக்கு குடிப்பழக்கம் இருந்ததாக தெரிகிறது. அடிக்கடி குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் தனது மனைவி செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதால் அவரது நடத்தையிலும் சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார்.

கடந்த 15-12-2013 அன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த பரமசிவம், இது தொடர்பாக மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அவர், மனைவி காந்திமதியை கையால் தாக்கினார்.

இதில் நிலைதடுமாறி தரையில் விழுந்த மனைவி மீது ஏறி அமர்ந்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் கொலையை மறைப்பதற்காக மனைவியின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

பின்னர் அவரது உடலை 3 துண்டுகளாக வெட்டி, தலையை ஒரு கோணிப்பையில் எடுத்துச்சென்று சென்னையில் உள்ள கூவம் ஆற்றிலும், உடலின் மேல்பாகத்தை சோழவரம் பகுதியில் உள்ள முட்புதரிலும் வீசினார். கால்களை வீட்டில் ஒரு கோணிப்பையில் வைத்திருந்தார்.

பின்னர் 3 நாட்களுக்கு பிறகு அதனை வெளியே எடுத்து செல்லும்போது துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சோழவரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பரமசிவம் தனது மனைவியை கொடூரமாக கொலை செய்தது தெரிந்தது.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த சோழவரம் போலீசார், பரமசிவத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பரமசிவத்துக்கு ஆயுள்தண்டனையும், கொலை குற்றத்தை மறைத்ததற்காக மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதனை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்