வாடகை செலுத்தாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாததால் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2018-08-23 22:00 GMT
காட்டுமன்னார்கோவில், 


காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான 28 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு உள்ளன. இதில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மாதந்தோறும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வாடகை கட்ட வேண்டும். ஆனால் 7 வியாபாரிகள் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தவில்லை. இதனால் பல மாதங்கள் வாடகை பாக்கி உள்ளது.

வாடகை பாக்கியை செலுத்தக்கோரி பேரூராட்சி நிர்வாகம் 7 கடை வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கியது. அதில் 22-ந் தேதிக்குள் வாடகை பாக்கியை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் 23-ந் தேதி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் 7 கடை வியாபாரிகள் வாடகை பாக்கி செலுத்தவில்லை. எனவே வாடகை பாக்கி செலுத்தாததால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்க பேரூராட்சி செயல் அலுவலர் ராம்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து துப்புரவு ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் இளநிலை உதவியாளர் முருகன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் செல்வம், சாந்தி மற்றும் பணியாளர்கள் நேற்று காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை பார்த்ததும் 4 கடை வியாபாரிகள் உடனடியாக வாடகை பாக்கியை செலுத்தினர். 3 கடை வியாபாரிகள் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. எனவே அந்த 3 கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதேபோல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வாடகை பாக்கி செலுத்தாததால் 2 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்