தாறுமாறாக ஓடிய லாரி மோதி மூதாட்டி பலி

ஆலுவா அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-08-23 22:57 GMT
எர்ணாகுளம், 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் உள்ளவர்களின் தேவைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் எர்ணாகுளத்தில் இருந்து லாரியில் குடிநீர் கொண்டுசெல்லப்பட்டது. லாரியை ராமசந்திரன் (வயது 52) என்பவர் ஓட்டினார். மேலும், லாரியில் ராமசந்திரனின் மகன் அபிநவ் (8), மற்றொரு டிரைவர் சுனில்குமார் ஆகியோரும் வந்தனர்.

ஆலுவாவை அடுத்துள்ள கோரத்தோடு பகுதியில் லாரி வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. லாரியை கட்டுக்குள் கொண்டுவர டிரைவர் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் எதிரே வந்த 2 ஆட்டோக்கள் மீதும், சாலையோரம் நடந்து சென்ற ஒரு பெண் மீதும் மோதியது. மேலும் நிற்காமல் சென்ற லாரி, ஒரு கார், 4 மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்த பாஸ்கரன் மனைவி தங்கம்மாள் (62) என்பவர் தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் லாரியில் வந்த டிரைவர் சந்திரன், அபிநவ், சுனில்குமார் மற்றும் ஒரு ஆட்டோ டிரைவர் ஷாஜி (35), சாலையோரம் நடந்து சென்ற ராதாமணி (40) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த கோரத்தோடு பகுதி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான தங்கம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்