ஐஸ்கிரீம் கடையில் பணம் திருட்டு: மோட்டார் சைக்கிளில் சென்று பிடித்த உரிமையாளர்

வேடசந்தூர் அருகே ஐஸ்கிரீம் கடையில் பணம் திருடி விட்டு பஸ்சில் தப்பி சென்ற 2 பேரை 7 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் உரிமையாளர் விரட்டி பிடித்தார்.

Update: 2018-08-23 22:52 GMT
வேடசந்தூர், 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புகல்லூரி அருகே ஐஸ்கிரீம் கடை வைத்திருப்பவர் திருமலைசாமி. இவரது கடைக்கு நேற்று மாலை 2 பேர் வந்தனர். அவர்கள் ரூ.2 ஆயிரம் கொடுத்து 5 ஐஸ்கிரீம் வேண்டும் என்றார்கள்.

கடைக்காரர் 5 ஐஸ்கிரீமையும், மீதித்தொகை ரூ.1,900-யும் கொடுத்துள்ளார். அதை பெற்றவர்கள், எங்களுக்கு 20 ரூபாய் ஐஸ்கிரீம் வேண்டாம், 10 ரூபாய் ஐஸ்கிரீம் தான் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து திருமலைசாமி 10 ரூபாய் ஐஸ்கிரீம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது கடையில் பணப்பெட்டியில் இருந்து ரூ.2 ஆயிரத்தை திருடிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
அப்போது அந்த வழியாக வந்த வேடசந்தூர் செல்லும் பஸ்சில் அவர்கள் ஏறினர். இந்தநிலையில் பணப்பெட்டியில் ரூ.2 ஆயிரம் திருட்டு போய் இருப்பதை அறிந்த திருமலைசாமி, பஸ்சில் ஏறி தப்பி சென்ற 2 பேரையும் பிடிக்க முயற்சித்தார். கடையை விட்டு வெளியே வந்து திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது.

இதையடுத்து திருமலைசாமி, தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பஸ்சை பின்தொடர்ந்து 7 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று வேடசந்தூருக்கு வந்தார். அங்கு பஸ்சில் இருந்து இறங்கி 2 பேரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த திருமலைசாமி திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டார். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 2 பேரையும் திருமலைசாமி பிடித்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் 2 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வீரலப்பட்டி மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள புரவிபாளையத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் ஊசி, பாசி விற்பவர்கள் என்றும், மதுபோதையில் பணம் திருடியதாகவும் கூறினர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் நடந்த தண்ணீர்பந்தம்பட்டி எரியோடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்டது என்பதால், அவர்கள் 2 பேரையும் வேடசந்தூர் போலீசார் எரியோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து எரியோடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்