உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 8 ஆயிரத்து 650 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 8 ஆயிரத்து 650 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-23 22:30 GMT

பெரம்பலூர்,

தமிழக அரசு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, உறுப்பினர் திருமண உதவித்தொகை, உறுப்பினர் சார்ந்தோர் திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து நிவாரணம், ஈமச்சடங்கு உதவித்தொகை, ஆதரவற்ற விவசாய கூலித்தொழிலாளர் ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம், தற்காலிக இயலாமை ஓய்வூதியம் (காசநோய், புற்றுநோய், எச்.ஐ.வி.) ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயத்தொழிலாளர்கள், தோட்ட பயிர் செய்வோர், பட்டுப்புழு வளர்ப்பவர்கள், உர வகை பயிர்களை செய்வோர், பால்பண்ணைத்தொழில் செய்வோர், கோழிப்பண்ணை, கால்நடை வளர்ப்பு தொழில் செய்வோர், தங்கள் நிலங்களில் மரங்களை வளர்ப்பவர்கள், உள்ளூர் மின்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உறுப்பினராக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்குண்டான பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு திருமண உதவித் தொகையாக ஆண்களுக்கு ரூ.8 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.10 ஆயிரமும், இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.22 ஆயிரத்து 500–ம், விபத்து மற்றும் ஈமச்சடங்கு தொகையாக ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500–ம், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. ஆயிரமும் வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாவிலும் விவசாயி மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களின் குடும்பத்தை சேர்ந்த 8 ஆயிரத்து 650 பயனாளிகளுக்கு நடப்பு நிதியாண்டில் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 93 லட்சத்து 82 ஆயிரத்து 70 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறத் தகுதியுள்ள நபர்கள் எவரேனும் இருப்பின் “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு“ அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் அந்தந்த தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரை அணுகி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்