அரசு விடுதிகளில் பெண் சமையலர் பணிக்கு நேர்காணல் 21 காலிப்பணியிடத்துக்கு 250–க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கான அரசு விடுதிகளில் பெண் சமையலர் பணிக்கு நேர்காணல் நேற்று நடந்தது. 21 காலிப்பணியிடத்துக்கான இந்த நேர்காணலில் 250–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2018-08-23 22:45 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவிகளுக்கான அரசு விடுதிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான பெண் சமையலர் பணிக்கான நேர்காணல் நேற்று கலெக்டர் அலுவலக 2–வது தளத்தில் நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி பாண்டியன் தலைமையில், சென்னை பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் முன்னிலையில் சமையலர் பணிக்கு விண்ணப்பித்திருந்த பெண்களிடம் தனித்தனியாக நேர்காணல் நடத்தப்பட்டது.

பெண் சமையலருக்கான பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்து நேர்காணலுக்கு வந்திருந்த பெண்களிடம் முதலில் அதிகாரிகள் அசல் கல்வி சான்றிதழ்களை சரிபார்த்தனர். 21 காலிபணியிடத்துக்கு நடந்த இந்த நேர்காணலில் சுமார் 250–க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் காலையிலேயே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து நேர்காணலுக்காக நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் நேர்காணல் நடந்த இடத்திற்கு வெளியே காத்திருந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் நேர்காணலுக்கு வந்திருந்த பெண்களில் பலர் கைக்குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் வந்திருந்ததை காணமுடிந்தது. நேர்காணலுக்கு பெண்கள் சென்றதால், அவர்களின் குழந்தைகளை அவரது கணவன்மார்கள், குடும்பத்தினர் பார்த்து கொண்டனர். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான அரசு விடுதிகளில் உள்ள 11 ஆண் சமையலர் காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்