கேரளாவுக்கு வெளிநாடுகளின் நிவாரண நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் வைகோ பேட்டி

கேரளாவுக்கு வெளிநாடுகளின் நிவாரண நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று வைகோ கூறினார்.

Update: 2018-08-23 23:00 GMT

அரியலூர்,

அரியலூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ம.தி.மு.க, பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரியில் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தோம் தற்போது காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி நீர் வந்தும் விவசாயிகளுக்கு பலன் இல்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. முக்கொம்பு மேலணையில் கொள்ளிடத்தில் உள்ள மதகுகள் உடைந்து போனதற்கு காரணம் மணல் அள்ளப்பட்டதுதான்.

காவிரியில் தடுப்பணைகள் கட்ட ரூ.850 கோடி ஒதுக்கி மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014–ல் அறிவித்தார். தடுப்பணைகள் கட்டி இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. கேரளா மாநிலத்திற்கு அரபு நாடுகள் உதவி செய்ய முன்வருகிறது. கடந்த காங்கிரஸ் அரசு உதவி வேண்டாம் என்று கூறியதை மேற்கோள் காட்டி மத்திய அரசு நிதி வேண்டாம் என்று கூறுகிறது. மறுபரிசீலனை செய்து கேரளாவுக்கு வெளிநாடுகளின் நிவாரண நிதி கிடைக்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை கேரளாவிற்கு தர இயலாது. குடிமராமத்து பணிகள் பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்