ஓடும் ரெயில் மீது கல்வீச்சு; பயணி படுகாயம்

கோவை பீளமேடு அருகே ஓடும் ரெயில் மீது கல் வீசப்பட்டது. இதில் பயணி படுகாயம் அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-23 22:00 GMT
கோவை,ஆக.


கோவை மாநகரில் சிங்காநல்லூர், பீளமேடு, கணபதி, ரத்தினபுரி, ஆவாரம்பாளையம் வழியாக ரெயில் தண்டவாளம் செல்கிறது. இதில் ரத்தினபுரியில் இருந்து பீளமேடு வரை உள்ள பகுதியில் தண்டவாளத்தின் ஓரத்தில் விளையாடும் சிறுவர்கள் ஓடும் ரெயில் மீது கற்களை வீசும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

இதை தடுக்க ரெயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் ரெயில் மீது கல் வீசும் சம்பவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் கோவையில் இருந்து ஈரோட்டுக்கு நேற்று முன்தினம் மாலை 4.30 மணிக்கு பயணிகள் ரெயில் புறப் பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

அந்த ரெயில் மாலை 4.45 மணிக்கு பீளமேடு ரெயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது திடீரென்று மர்ம நபர்கள் ஓடும் ரெயில் மீது கற்களை வீசி விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் ரெயிலின் ஜன்னல் ஓரத்தில் இருந்த ஊத்துக்குளியை சேர்ந்த விஜயகுமார் (வயது 20) என்பவரின் தலையில் ஒரு கல் பட்டது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து அந்த ரெயில் இருகூர் ரெயில் நிலையத்தில் நின்றதும், அக்கம்பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதி வழியாக செல்லும் தண்டவாளத்தின் ஓரத்தில் பலர் கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகிறார்கள். அவர்களில் சிலர் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் மீது விளையாட்டாக கற்களை வீசுகிறார்கள். ஏற்கனவே ரெயில் மீது கற்களை வீசிய சிறுவர்களை கண்டறிந்து எச்சரித்து அனுப்பினோம்.

தற்போது ரெயில் மீது கற்களை வீசியது யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம். இதுதவிர ரெயில்கள் மீது கற்களை வீசக்கூடாது என்பது குறித்தும் தண்டவாளத்தின் ஓரத்தில் குடியிருப்பவர்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்