கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை

மது குடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-23 21:30 GMT
சிங்காநல்லூர்,


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள எஸ்.ஐ.எச்.எஸ். காலனியை சேர்ந்தவர் பாபு (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (40). இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டு ஆகிறது. ஒரு மகள் உள்ளார். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பாக்கியலட்சுமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை விட்டு பிரிந்து மகளுடன் கோவையில் தனியாக வசித்து வருகிறார்.
இதனால் குடிப்பழக்கத்துக்கு அடிமையான பாபு, காலையிலும், மாலையிலும் மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. அதன்படி நேற்று காலை 7.30 மணிக்கு கோவை விமான நிலையத்தின் பின்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அந்த மதுக்கடையில் 24 மணி நேரமும் மது கிடைப்பதால், அங்கு சென்று பாபு, மது அருந்திவிட்டு ஆயிரம் சாலை சந்திப்பு பகுதிக்கு வந்தார்.

அப்போது, எதிரே வந்த 5 பேர் குடிப்பதற்காக பாபுவிடம் பணம் கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறினார். ஆனாலும் அவர்கள் 5 பேரும் சேர்ந்து பாபுவின் சட்டையில் பணம் இருக்கிறதா? என்று தேடி பார்த்தனர். ஆனால் பணம் இல்லை.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் சேர்ந்து கத்தியால் பாபுவின் வயிற்றில் குத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கீழே சரிந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த பாபுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் பாபுவை கத்தியால் குத்திய 5 பேரும் அந்த பகுதியில் அடிக்கடி சுற்றித்திரிபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே கோவை விமான நிலையத்தின் பின்பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது அங்கு 5 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள், கோவையை சேர்ந்த பூசாரி மணி, மோகன், நவீன், சசி மோகன், ஆனந்த் என்பதும், இவர்கள் 5 பேரும் சேர்ந்து பாபுவை கத்தியால் குத்தி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்