தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானைகள்
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டதால், தொழிலாளர்கள் பீதியடைந்தனர்
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் தேயிலை தோட்டங்களிலும், குடியிருப்புகளிலும் காட்டுயானைகள் அடிக்கடி முகாமிட்டு வருகின்றன. இதனால் வீடுகளை விட்டு தனியாக வெளியே சென்றுவர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். சில நேரங்களில் மனித- காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், அது குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் மேங்கோரேஞ்சு தேயிலை தோட்டத்துக்குள் நேற்று மதியம் 12 மணியளவில் குட்டியுடன் 6 காட்டுயானைகள் புகுந்தன. தோட்டத்துக்குள் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதை கண்டு பீதியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். மேலும் இதுகுறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் காட்டுயானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதேபோன்று சேரங்கோடு திருவள்ளுவர் நகரில் அடிக்கடி 3 காட்டுயானைகள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.