நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை மீண்டும் தொடக்கம் முதல் நாளில் 93 வழக்குகள் பதிவு

நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. முதல் நாளான நேற்று 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Update: 2018-08-23 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் சோதனை நடந்தது. மணிமேடை, கட்ட பொம்மன் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், மீனாட்சிபுரம், வடசேரி என ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் போலீசார் சோதனை நடத்தினர்.

ஆனால் திருச்சியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற கணவன்-மனைவியை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஹெல்மெட் சோதனை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை நேற்று மீண்டும் தொடங்கியது. போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்சேகர், செந்தில்வேல் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாளான நேற்று மொத்தம் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர் மட்டும் இன்றி பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் இருந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுபற்றி போக்குவரத்து ஒழுங்குபிரிவு இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜிடம் கேட்டபோது, “இருசக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியவில்லை எனில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. எனவே பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

மேலும் செய்திகள்