நூதன முறையில் லாரியில் மணல் கடத்தல்

விழுப்புரம் அருகே நூதன முறையில் லாரியில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-23 21:45 GMT
விழுப்புரம், 


விழுப்புரம் அருகே சேர்ந்தனூரில் இருந்து அரசமங்கலம் வழியாக மணல் கடத்தப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், போலீஸ்காரர் சுகுமார் ஆகியோர் அரசமங்கலத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரையும், அந்த காருக்கு பின்னால் வந்த லாரியையும் போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். ஆனால் அந்த காரும், லாரியும் அங்கு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. உடனே போலீசார் தங்கள் ஜீப்பில், அந்த காரையும், லாரியையும் பின்தொடர்ந்து துரத்திச்சென்றனர். சின்னக்கள்ளிப்பட்டு என்ற இடத்தில் காரையும், லாரியையும் போலீசார் வழிமறித்து மடக்கினர்.

பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில் மேல்பகுதியில் செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்ததும், அதன் கீழ் பகுதியில் 3 யூனிட் அளவிற்கு மணல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே லாரியில் வந்த 3 பேர் மற்றும் காரில் வந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சேர்ந்தனூரை சேர்ந்த வெற்றிவேல் (வயது 27), பாலமுருகன் (21), விஜயகுமார் (37), மணிகண்டன் (23), அரசமங்கலத்தை சேர்ந்த அய்யனார் (35) என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்தனூரில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணலை நெய்வேலிக்கு கடத்த முயன்றதும், போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க லாரியில் மணலை ஏற்றி அதன் மேல் செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்து நூதன முறையில் கடத்தியதும், அந்த லாரியில் வெற்றிவேல், பாலமுருகன், விஜயகுமார் ஆகியோரும் லாரிக்கு முன்னால் வழிக்காவல் போன்று காரில் மணிகண்டன், அய்யனார் ஆகியோர் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து வெற்றிவேல் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மணலையும் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்