சேலம் கன்னங்குறிச்சி: மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டெருமை இறந்தது

சேலம் கன்னங்குறிச்சியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டெருமை இறந்ததால் வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

Update: 2018-08-22 23:38 GMT
கன்னங்குறிச்சி,

சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் காட்டெருமைகள் அதிகளவில் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்காடு வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டெருமை வழித்தவறி சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதிக்கு வந்தது. ஊருக்குள் புகுந்த அந்த காட்டெருமை எங்கு செல்வது என்று தெரியாமல் குடியிருப்பு பகுதியில் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டெருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

முதல்நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் துரத்தப்பட்டதால் நேற்று முன்தினம் அது மிகவும் சோர்வாக காணப்பட்டது. பின்னர் மூக்கனேரி பகுதியில் உள்ள சோளக்காட்டு பகுதிக்கு சென்று அது படுத்துக்கொண்டது. ஆனால் எந்த நேரமும் குடியிருப்பு பகுதிக்கு மீண்டும் வந்துவிடும் என்பதால் கோவை மண்டல கால்நடைத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையில் அதிகாரிகளும், வனத்துறையினரும் சேர்ந்து மயக்க ஊசி செலுத்தி காட்டெருமையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், நேற்று காலையில் மூக்கனேரி பகுதியில் வயல்வெளியில் படுத்திருந்த காட்டெருமை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். ஏற்கனவே, சோர்ந்து காணப்பட்ட அந்த காட்டெருமை, மயக்க ஊசி செலுத்தியதும் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தது. இதையடுத்து கிரேனை வரவழைத்து காட்டெருமையை கயிற்றால் கட்டி மற்றொரு வாகனத்தில் ஏற்றினர். பிடிபட்ட அந்த காட்டெருமையை கன்னக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேடிக்கை பார்த்தனர்.

பின்னர் மயக்க நிலையில் பிடிபட்ட காட்டெருமையை குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். ஆனால் தொடர்ந்து அது மயக்கநிலையிலேயே படுத்து இருந்தது. பின்னர் சிறிது நேரத்திலேயே அந்த காட்டெருமை பரிதாபமாக இறந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் இறந்த காட்டெருமையை குரும்பப்பட்டி வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

மேலும் செய்திகள்