திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் இருந்து கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் மாவட்ட கலெக்டர்கள் அனுப்பி வைத்தனர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

Update: 2018-08-22 23:30 GMT

திருவள்ளூர்,

மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக பல்வேறு தரப்பினரும் நிவாரண பொருட்கள், நிதி உதவிகள் வழங்கி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை 5 லாரிகள் மூலம் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அனுப்பி வைத்தார்.

பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவிட மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்கள் முன்வரவேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார். அதைதொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் திரட்டப்பட்டது.

அதன்படி நேற்று 2–வது கட்டமாக கேரள மாநிலத்துக்கு தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் ரூ.26 லட்சம் மதிப்பிலான பல்வேறு வகையான நிவாரணபொருட்களை லாரிகள் மூலம் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி அனுப்பி வைத்தார்.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த நிவாரண பொருட்களை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், துணை கலெக்டர் ரத்னா, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், தனிதாசில்தார் வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியின் முயற்சியால் இதுவரையில் மொத்தம் ரூ.76 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 2 கட்டங்களாக கேரளாவுக்கு ரூ.61 லட்சத்து 59 ஆயிரத்து 70 மதிப்பிலான 58.5 டன் வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் அனுப்பி வைத்தார்.

தற்போது 3–வது கட்டமாக காஞ்சீபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய வட்டங்களைச்சேர்ந்த பொதுமக்களின் உதவியோடு ரூ.51 லட்சத்து 22 ஆயிரத்து 123 மதிப்பிலான 46 டன் வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா கேரளாவின் பாலக்காடு நிவாரண முகாமுக்கு அனுப்பி வைத்தார்.

இதுவரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டரின் முயற்சியால் 3 கட்டங்களாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 81 ஆயிரத்து 193 மதிப்பில் அரிசி மூட்டைகள், தேங்காய் எண்ணை, பால் பவுடர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், நாப்கின்கள்,சோப்புகள், பருப்பு வகைகள், குடிநீர் பாட்டில்கள், சர்க்கரை, போர்வைகள், மருந்து பொருட்கள், 100 ஸ்டவ்கள், மளிகை பொருட்கள், துணி வகைகள், கல்வி உபகரணங்கள் உள்பட 104.5 டன் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் பணி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து நடைபெறும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகம்மது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்ட அலுவலர் ராஜீ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்