வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை பாலியலில் ஈடுபடுத்திய 3 பேர் கைது

திருமுல்லைவாயல் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை பாலியலில் ஈடுபடுத்திய கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-08-22 23:16 GMT

ஆவடி,

சென்னைக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம்பெண்களிடம் சினிமா, தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும், தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறி அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களா வீடுகள், தனியார் விடுதிகளுக்கு அழைத்து சென்று அவர்களை கட்டாயப்படுத்தி பாலியலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தன.

இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் ரகசியமாக கண்காணித்து விபசார தரகர்களை கைது செய்து வருகின்றனர்.

அந்தவகையில் திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை சிலர் பாலியலில் ஈடுபடுத்தி வருவதாக திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்ஸ்பெக்டர் பெரியதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை அந்த வீட்டை சோதனை செய்தனர்.

அப்போது அங்கு பெண்களை சிலர் பாலியலில் ஈடுபடுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெண்களை பாலியலில் ஈடுபடுத்தியதாக பாஸ்கர் (வயது 62), அவரது மனைவி அம்மு (40), பிரியா (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

விசாரணையில் பாஸ்கர் தனது மனைவியுடன் சேர்ந்து அந்த வீட்டை 3 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்து பெண்களை பாலியலில் ஈடுபடுத்தி வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் அம்பத்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 4 பெண்களும் சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்