ஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்

ஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக் குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-08-22 22:59 GMT
ஆத்தூர்,

ஆத்தூர் நகராட்சி 28-வது வார்டு ஜோதி நகர் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வந்தனர். சிலர் காசு கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் வினியோகிக்க கோரி பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வினியோகிப்பாளரிடமும், நகராட்சி அலுவலர்களிடமும் புகார் தெரிவித்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த ஜோதிநகரை சேர்ந்த பெண்கள் சிலர் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் சேலம்-கடலூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். காலிக்குடங்களுடன் சாலையில் நின்று குடிநீர் வழங்க கோரி கோஷமிட்டனர்.

பெண்களின் இந்த திடீர் மறியலால் அந்த வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். அதற்கு மறியலில் ஈடுபட்டவர்கள் குடிநீர் வினியோகித்து 15 நாட்களுக்கு மேலாகி விட்டது. குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறினார்கள். இதையடுத்து போலீசார், நகராட்சி குடிநீர் லாரி மூலம் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்