ரூ.500 கோடி நிலமுறைகேடு: மாநகராட்சி அதிகாரிகள் 4 பேர் பணி இடைநீக்கம்

ஜோகேஸ்வரியில் ரூ.500 கோடி நிலமுறைகேடு தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 4 பேரை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் அஜாய் மேத்தா உத்தரவிட்டார்.

Update: 2018-08-22 22:34 GMT
மும்பை,

மும்பை ஜோகேஸ்வரியில் பொழுதுபோக்கு மைதானம் அமைப்பதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் தனியார் நிலத்தை கையகப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தது. ஆனால் உரிய நேரத்தில் அந்த நிலத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து கையகப்படுத்தாதன் காரணமாக மாநகராட்சி அதனை இழக்க நேரிட்டது. முறைகேடுகள் காரணமாகத்தான் அந்த நிலத்தை இழந்ததாக மும்பை காங்கிரஸ் கட்சி மாநகராட்சி மீது குற்றம் சாட்டியது.

மேலும் இந்த முறைகேட்டில் மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சமீபத்தில் மும்பை காங்கிரஸ் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக மாநகராட்சி சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சியின் சட்டத்துறையை சேர்ந்த துணை சட்ட அதிகாரி பி.வி. நாயக், வளர்ச்சி திட்டத்துறையின் நிர்வாக என்ஜினீயர் அசோக் செங்ட்கே, உதவி என்ஜினீயர் விஜயகுமார் வாக், துணை என்ஜினீயர் கணேஷ் பாபட் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தது.

இதன் காரணமாக அவர்கள் 4 பேரையும் மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை அவர் மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் அறிவித்தார். இந்த விவகாரத்தில் மேலும் 14 பேர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்