500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
அவினாசி அருகே 500 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அவினாசி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தமிழ்செல்வன் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மணி, அட்டிக்கண், பாலமுருகன், கேசவராஜ், சதீஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அவினாசி பகுதிக்கு சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதா? என சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் புகையிலை பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவில் அதிகாரிகள் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த காருக்குள் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். உடனே அதிகாரிகள் காரில் இருந்த 2 வடமாநில வாலிபர்களை பிடித்து திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சோபாராம் (வயது 28), ஜிஜேந்திரகுமார் (25) என்பது தெரியவந்தது.
மேலும் கோவை மாவட்டம் சூலூரில் இருந்து அவினாசி பகுதியில் விற்பனை செய்ய குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கொண்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 500 கிலோ புகையிலை மற்றும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். மேலும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் சிக்கிய புகையிலை பொருட்களின் மாதிரி சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “உணவு பொருட்களின் தரம் மற்றும் கலப்படம் குறித்து பொதுமக்கள் 94440-42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார்களின் பேரில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றனர்.