கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம்

கூலி உயர்வு உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-22 22:15 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் விசைத்தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 1200–க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014–ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் இது வரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் தீர்வு காணப்படவில்லை.

இதனை கண்டித்தும், புதிய கூலி மற்றும் ஊக்கத் தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தியும், தொழிலாளர்கள் சார்பில் 2 முறை போராட்டம் நடத்தப் பட்டுள்ளது. மேலும் 4 கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 3 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் 50 சதவீத கூலி உயர்வு, நாள் ஒன்றுக்கு ரூ.15 ஊக்கத்தொகை, விடுமுறை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்க கோரி தொழிற் சங்கத்தின் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தளவாய்புரம் பஸ் நிலையம் எதிரே நாள் ஒன்றுக்கு 20 தொழிலாளர்கள் என சுழற்சி முறையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில் இருந்து இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறும் 5–ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மறியல், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்