கூடலூரில் அரசு பஸ் மீது லாரி மோதல் கண்டக்டர் உள்பட 5 பேர் படுகாயம்

கூடலூரில் அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-08-22 22:15 GMT

கூடலூர்,

கூடலூரில் இருந்து தாளூருக்கு நேற்று மதியம் 12 மணியளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கோழிப்பாலம் வளைவில் திரும்பியபோது எதிரே கேரளாவில் இருந்து கூடலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று வந்தது. அப்போது அரசு பஸ் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. மேலும் லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் பரமேஸ்வரன்(வயது 48) மற்றும் பயணிகள் கூடலூரை சேர்ந்த குமரேசன்(25), கிருஷ்ணராஜ்(15), மகேஷ்வரன்(51), கணேசன்(57) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக கூடலூர்– கேரள சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய பஸ்சையும், லாரியையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்