மனிதநேயம் போற்றிய தமிழக மீனவர்கள்
கேரளா நூறு சதவீத எழுத்தறிவு பெற்ற மாநிலம். உலகின் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சொர்க்கம்.
பசுமை நிறைந்த பூமி. இன்னும் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனது.
இன்றோ வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது சோகம் தான். அணை திறந்த வெள்ளத்தினால் ஏற்பட்ட கோர அழிவிலிருந்து தப்பிக்க ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், சிறுவர், பெரியோர் என்ற பாகுபாடின்றி அனைவரும் போராடுகிறார்கள். எனக்கு அனைவரும் சமமே என சொல்லாமல் சொல்லியுள்ளது இயற்கை.
மழை வெள்ளம் ஒருபுறம், நிலச்சரிவுகள் மறுபுறம், பலத்த காற்று வீசும் என்ற வானிலை எச்சரிக்கை இன்னொரு புறம். அன்றாடம் அறிவிக்கப்பட்ட சாவு எண்ணிக்கை கல்மனம் கொண்டோரையும் கண்கலங்க வைத்துள்ளது.
பள்ளிக்கூடம், கல்லூரி, சமூகக்கூடம், திருமண மண்டபமென முகாம்களில் மக்கள் தஞ்சமடைந்தாலும் நிறைய குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கேள்விக்குறி. உலகின் மூலை முடுக்கெல்லாம் கேரளத்தவர் இருப்பர் என மகிழ்வோடு கூறுவோர், இன்று ஆறுதல் கூற வார்த்தைகளின்றி வாயடைபட்டு தவிக்கின்றனர்.
பல்லாயிரக்கணக்கான போலீசார், தீயணைப்பு வீரர்கள், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை, ராணுவ வீரர்கள் களத்தில் மக்களை மீட்க போராடுகிறார்கள். இத்தோடு ஹெலிகாப்டர்களும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் படகுகளும், மீன்வளத்துறைக்கு சொந்தமான படகுகளும் இரவுபகலாக களத்தில் நிற்கின்றன.
பிரதமர், கேரள கவர்னர், கேரள முதல்-மந்திரி ஆகியோர் வெள்ள பாதிப்பையும், மீட்பு பணியையும் நேரில் பார்வையிட்டது, களத்தில் மக்களை காப்பாற்ற போராடும் முப்படையினரையும் பிறரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போதிய நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்பது நியாயமான வேண்டுதல். இயற்கை பேரிடரால் ஏற்படுகின்ற அழிவுகளும் உயிரிழப்புக்களும் தவிர்க்க முடியாதவை.
இதற்கு முன் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அரசாங்கத்தின் உதவியினால் சிறிது சிறிதாக மீண்டெழுவதைப்போல, கேரளமும் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. எத்தகைய சவாலையும் எதிர்கொள்கின்ற ஆற்றல் கேரள மக்களுக்கு உண்டு என்பது தெரியாததல்ல.
சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், அரசின் பலதுறையினர் என பலராலும் தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படும் நிவாரண பொருட்கள் ஏராளம். தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் வரும் செய்திகளைப் பார்த்து பலரும் தங்களது வருத்தத்தை தெரிவிப்பதும், லட்சங்களும், கோடிகளும் நிவாரணமாக வந்து குவிவது ஒருபுறம் இருந்தாலும், உயிருக்குப் போராடியவர்களை மீட்க எவ்வித எதிர்பார்ப்புமின்றி தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணி புரிகின்ற மீனவர்களை பாராட்ட வார்த்தை இல்லை.
இயற்கையின் சீற்றங்களால் இழந்தது போக மிச்சமிருப்பவை சீரிய சிந்தனையும் எதிர்கால நம்பிக்கையும் தான். வானமே கூரையென்றும் பூமியே மெத்தையென்றும் இரண்டு கைகளுமே தலையணையென்றும் வைத்துக்கொண்டு உடைந்த நெஞ்சங்களோடு உயிர்வாழ்ந்து கொண்டிருந்த, ஆழ்கடல் மீன்பிடிப்பில் உலகப்புகழ் பெற்ற குமரி மாவட்டத்தின் தூத்தூர் மண்டல மீனவர்களை, இயற்கையினால் கட்டிப்போட முடியவில்லை.
தங்களது படகுகளுடன் கேரளா விரைந்தனர். குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறையினர் அளித்த உற்சாகத்தால் மேலும் பலர் இவர்களோடு சேர்ந்து கொண்டனர்.
காலை முதல் நள்ளிரவு வரை அயராது தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குடிசைகளிலும் அடுக்குமாடி வீடுகளின் முகப்பிலும் நின்று கதறிய சிறுவர் சிறுமியரை தோளிலும், பெரியவர்களை இரண்டு மூன்று பேர் சேர்ந்து கைத்தாங்கலாகவும் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்துள்ளனர். இவர்களால் ஆனந்த கண்ணீர் வடித்த கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் ஏராளம்.
‘உங்கள் மீனவர்கள் செய்யும் சேவைக்கு நிகர் இல்லை. பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள். டி.வி.யில் பார்த்தேன்’ என்று என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் நள்ளிரவில் தொடர்பு கொண்டு பேசியபோது அகம் மகிழ்ந்தேன்.
எம் அண்டை மாநிலமான கேரளாவுக்கு எத்தகைய இடர் வரினும் நாங்கள் எந்நேரமும் உதவத் தயார் என்ற தமிழ் மக்களின் மனித நேயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலையே வீடாக நினைத்து, பலநாட்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிப்பதன் மூலம் அந்நிய வருவாயை அதிகமாக ஈட்டி, நம் தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்பதை ஏற்கெனவே நிரூபித்த இந்த ஆழ்கடல் சுறா வேட்டைக்காரர்களின், தற்போதைய தக்க சமயத்து உதவியின் மூலம் பலர் உயிர் பிழைத்துள்ளதை இந்த அகிலமே கண்கூடாக கண்டுள்ளது. இம்மீனவர்களின் ஈரமான இதயத்துக்கு நிகர் உண்டோ?
தக்க சமயத்தில் கடவுளாக வந்து என்னை காப்பாற்றியுள்ளர். எனக்கு பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் உங்கள் பெயரைத்தான் சூட்டுவேன் என தன்னை காப்பாற்றிய மீனவரைப்பார்த்து ஒரு கர்ப்பிணிப்பெண் கூறியதாகவும் ஒரு செய்தி.
கேரளாவில் மீன்பிடிக்க திடீர் கட்டுப்பாடுகள், குறிப்பிட்ட மீன்களை பிடிக்கக்கூடாது, மீன்பிடிக்க அதிக வரி என அவ்வப்போது ஏற்படுகின்ற கசப்பான அனுபவங்களை நமது மீனவர்கள் மறந்தார்கள். மனித நேயத்தோடு இணைந்தார்கள். பலரது இதயங்களையும் வென்றார்கள்.
‘கடவுளின் தேசம்’ என்று பலராலும் வர்ணிக்கப்பட்ட கேரளா இயற்கையின் சீற்றத்தால் நிலைகுலைந்த உடன், ‘கேரளத்தின் ராணுவம் மீன்பிடித்தொழிலாளர்கள் தான்’ என்ற கேரள முதல்வரின் கூற்று, நம் மீனவர்களின் உழைப்பும் தியாகமும் எத்தகையது என்பதை உணர்த்துகிறதல்லவா!
ஆம், மனிதம் போற்றிய தமிழக மீனவர்களுக்கு கேரளாவில் நல்ல மரியாதை கிடைத்துள்ளது.
-ப.ஜஸ்டின் ஆன்டணி, ஐ.நா. சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினர்