மாவட்டம் முழுவதும் கல் அரவை நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும்
மாவட்டம் முழுவதும் உள்ள கல் அரவை நிறுவனங்களை பதிவு செய்ய வேண்டும் என்று தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2011-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கம், கனிம வளங்கள் கடத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் மற்றும் கனிம விற்பனையாளர்கள் விதிகளின் கீழ் தேனி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து கல் அரவை எந்திர உரிமையாளர்கள் தங்களது கல் அரவை நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். கனிம விற்பனையாளர்கள் விதிகளின் கீழ் இந்த பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், நிறுவனத்துக்கு தேவையான கற்களை அரசு அனுமதி பெற்ற கல்குவாரிகளில் இருந்து நடைச்சீட்டுடன் எடுத்துச் செல்லவும், அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, சிப்ஸ், கிரஷர் தூசி, தயாரிப்பு மண் (எம்.சாண்ட்) ஆகியவற்றை விற்பனை செய்யும் இடங்களுக்கு கொண்டு செல்லும் போது மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்படும் பதிவு சான்றிதழ், இலவச அனுமதிச் சீட்டுடன் தான் எடுத்துச் செல்ல வேண்டும்.
இவ்வாறு கல்குவாரிகளில் இருந்து கற்கள் மற்றும் கிராவல் மண்ணை நடைச்சீட்டு மற்றும் கல் அரவை மையத்தில் இருந்து எடுத்துச் செல்லப்படும் ஜல்லி, சிப்ஸ், கிரஷர் தூசி மற்றும் தயாரிப்பு மண் ஆகியவற்றுக்கு அனுமதிச்சீட்டு இல்லாமல் ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி வாகன உரிமையாளர்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, கல் அரவை எந்திர உரிமையாளர்கள் தங்களின் கல் அரவை நிறுவனத்தை அடுத்த 15 நாட்களுக்குள் விண்ணப்பம் செய்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.