திருவண்ணாமலையில் ரூ.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டிடம் - கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் ரூ.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

Update: 2018-08-21 23:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பின்னர் சிலர் நகரின் மையப் பகுதியில் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்கின்றனர். பவுர்ணமி நாட்களிலும், தீபத் திருவிழா போன்ற விஷேச நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய லிங்கம் கோவில் அருகில் அருணாசலேஸ்வரர் கோவில் வைப்பு நிதியில் இருந்து பொதுப்பணித் துறை மூலம் ரூ.28 கோடி மதிப்பில் ‘யாத்ரி நிவாஸ்’ கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த கட்டிடம் 120 அறைகளுடன் 430 பேர் தங்கும் வகையில் 3 பகுதிகளாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர், கட்டிடத்தின் வரைப்படத்தை பார்வையிட்டு எந்தெந்த இடத்தில் என்னென்ன அறைகள் வர உள்ளது என்று பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ரூ.28 கோடி மதிப்பில் யாத்ரி நிவாஸ் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஓட்டல், தங்கும் விடுதி, கார் பார்க்கிங் போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணி பாதி நிறைவடைந்து உள்ளது. வருகிற மே மாதத்திற்குள் நிறைவடையும் என்றார்.

ஆய்வின் போது பொதுப் பணித்துறை (கட்டிடங்கள்) செயற்பொறியாளர் எஸ்.மதிவாணன், உதவி செயற்பொறியாளர் வி.ரவிச்சந்திரன் மற்றும் உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணன், உதவி மின் பொறியாளர் யோகேஷ், நகராட்சி ஆணையர் பாரிஜாதம், தாசில்தார் மனோகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதையடுத்து கிரிவலப்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அண்ணாநுழைவு வாயில் அருகில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கழிவறை கட்டும் பணி, தலா ரூ.11 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் காஞ்சி ரோட்டில் உள்ள அபய மண்டபம் அருகில் ஓய்வறை கட்டும் பணி, அடிஅண்ணாமலை 5 ரிஷி குளம் அருகில் ஓய்வறை கட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கட்டிடங்களின் விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளர் அசோக், உதவி பொறியாளர் பூபாலன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்