உதவி பேராசிரியர், விடுதி காப்பாளர்கள் மீது மாணவி புகார் - பொதுமக்கள் வேளாண்மை கல்லூரியை முற்றுகை

பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர், விடுதி காப்பாளர்கள் மீது மாணவி புகார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் வேளாண்மை கல்லூரியை முற்றுகையிட்டனர்.

Update: 2018-08-21 21:04 GMT
வாணாபுரம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே வாழவச்சனூரில் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு படிக்கும் மாணவி ஒருவருக்கு அந்த கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசிரியர் ஒருவர் மாணவி தங்கி படிக்கும் விடுதிக்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு விடுதி காப்பாளர்களாக உள்ள 2 பெண் பேராசிரியர்களும், அந்த உதவி பேராசிரியருக்கு ஒத்துழைப்பு கொடுக்க சொல்லி மாணவியிடம் செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். அதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளுக்கு நியாயம் வேண்டும் என்று வாழவச்சனூர் பொதுமக்களிடம் கேட்டு உள்ளனர்.

இதையடுத்து 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் மாணவியின் பெற்றோர் நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் கல்லூரியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் விடுதி காப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடம் கூறினர்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவி நடந்த சம்பவம் குறித்து கல்லூரி முதல்வருக்கு புகார் கடிதம் எழுதி கொடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுபா, வாணாபுரம் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் கல்லூரிக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் நடந்த சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனியிடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், மாணவி கூறிய குற்றச்சாட்டின் உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, கல்லூரி முதல்வரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் கல்லூரியின் வளாகத்தில் உள்ளதால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்