நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவே யூரியா உரமிட வேண்டும்: வீணாவதை தடுக்க வேளாண் துறை ஆலோசனை

நெல் பயிருக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவே யூரியா உரமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-08-21 23:00 GMT

விருதுநகர்,

வேளாண்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

நெல் சாகுபடியில் தழை, மணி, சாம்பல் சத்துகளுடன் நுண்ணூட்ட சத்தான துத்தநாகமும் போதிய அளவு இடப்பட வேண்டும். இயற்கை உரமாக ஒரு எக்டேருக்கு 12½ டன் தொழு உரம் இட வேண்டும். பசுந்தாள் உரம் என்றால் 6¼ டன் இட வேண்டும். நுண்ணுயிர் உரமாக அசோலா 250 கிலோ என்ற அளவில் நட்ட 3–ல் இருந்து 5 நாட்களுக்குள் பரவி தூவி நெற்பயிருடன் வளர்க்க வேண்டும். பின்னர் நெல்லுக்கு களை எடுக்கும் தருணத்தில் ரோட்டரி களை எடுப்பான் மூலமோ அல்லது காலால் மண்ணில் மிதித்து விட வேண்டும்.

அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா ஒவ்வொன்றும் 2 கிலோ என்ற அளவில் 25 கிலோ பெருமணலுடன் கலந்து நடவுக்கு முன்பு சீராக தூவி விட வேண்டும். சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 25 கிலோவும் நடவுக்கு முன்பு இட வேண்டும்.

யூரியாவை பரிந்துரைக்கப்பட்ட அளவில்தான் பயன்படுத்த வேண்டும். அதிகமாக போட்டால் அது நீரில் கலந்து ஆவியாகி வீணாகி விடும். அதனை 3 அல்லது 4 முறை பிரித்து போட்டால் சத்துகள் முழுமையாக பரவி பயிருக்கு கிடைக்கும்.

தழைச்சத்தை குறுகிய கால ரகங்களுக்கு 40 கிலோ இடவேண்டும். யூரியா, ஜிப்சம், வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து இடும்போது தழைச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கும். மணிச்சத்து போதிய அளவில் கிடைக்க ராக்பாஸ்பேட் உரத்தினை சூப்பர் பாஸ்பேட் அல்லது டை அம்மோனியம் பாஸ்பேட்டுடன் கலந்து இடலாம். சாம்பல் சத்தை கடைசி உழவின்போதும் தூர்கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடலாம்.

நுண்ணூட்ட கலவையை எக்டேருக்கு 12½ கிலோ என்ற அளவில் இட வேண்டும் அல்லது ஜிங்சல்பேட் உரமிட வேண்டும். 25 கிலோ ஜிங்சல்பேட்டை எக்டேருக்கு 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலக்கி நடவுக்கு முன்பு வயலில் தூவ வேண்டும்.

இலை வழி உரமாக கதிர் உருவான தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் கழித்தும் 2 முறை இலைவழி உரமாக யூரியா 1 சதவீதம் மற்றும் 2 சதவீத டி.ஏ.பி. மற்றும் மூரியேட் ஆப் பொட்டாஷ் 1 சதவீதம் ஆகியவற்றின் கரைசலை தெளிக்க வேண்டும்.

மண் வளத்தை அதிகப்படுத்தி விளைச்சலை உயர்த்த கனிம உரங்களுடன் இயற்கை உரங்கள், உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழு உரம் ஆகியவற்றை அளித்து உரப்பயன்பாட்டு திறனை அதிகரிப்பதன் மூலம் நெற்பயிரில் அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்