“போராட்டம் குறித்த ரஜினிகாந்தின் மாறுபட்ட கருத்து விசித்திரமானது” - டி.டி.வி.தினகரன் பேட்டி
“போராட்டம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த மாறுபட்ட கருத்து விசித்திரமானது“ என்று மதுரையில் அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறினார்.
மதுரை,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
திருப்பரங்குன்றம் தொகுதி ஜெயலலிதாவின் கோட்டை ஆகும். இங்கு எத்தனை ஆயிரம் கோடிகள் செலவு செய்தாலும் துரோகம் செய்தவர்களால் வெற்றி பெற முடியாது.
ஆர்.கே.நகரில் நடந்ததைப் போல் இங்கும் நடக்கும். தி.மு.க.வில் நடப்பது உட்கட்சி பூசல். அது பற்றி நான் இப்போது பேசுவது நாகரிகமாக இருக்காது.
விரைவில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்தவுடன் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும். நதிநீர் இணைப்பு திட்டங்கள் தொலைநோக்கு பார்வையில் செயல்படுத்தப்படும்.
கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்ததற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம். எம்.ஜி.ஆரை நீக்கிய பிறகுதான் அ.தி.மு.க. தோன்றியது. ஆனால் இதுபற்றி முழுவிவரம் தெரியாமல் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு எதிராக தூத்துக்குடியில் ரஜினிகாந்த் முன்பு கருத்து தெரிவித்தார். ஆனால் இப்போது மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் ஒதுக்காமல் இருந்திருந்தால் நானே களத்தில் இறங்கி போராடி இருப்பேன் என்று மாறுபட்ட கருத்தை அவர் சொல்வது விசித்திரமானது.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.