பேரையூர் தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீரை கொண்டு வர வேண்டும், விவசாயிகள் வலியுறுத்தல்

பேரையூர் தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2018-08-21 22:45 GMT

பேரையூர்,

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் தாசில்தார் இளமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பேரையூர் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த சில அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:–

தாடையம்பட்டி ஊருணியில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. சேடபட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிபட்டி பகுதியில் பயீர் காப்பிடு தொகை இன்னமும் வரவில்லை.

பெருங்காமநல்லூர் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஓட்டை போட்டு விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இது குறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. தாலுகா அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கில் வருகை தரும் பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை.

பேரையூர் தாலுகாவில் மழை இன்றி பல வருடங்களாக கண்மாய்கள் வறண்டு போய் உள்ளது. அதனால் வைகை அணையில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும். மேலும் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் கூற சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் யாரும் வருவதில்லை

இவ்வாறு விவசாயிகள் புகார்கள் கூறி பேசினர்.

பயீர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீட்டுத் தொகை கிடைக்கப் பெறாத விவசாயிகள் உரிய ஆவணங்கள் கொண்டு வந்தால் காப்பீட்டு நிறுவனத்தில் பேசி அவர்களுக்கு பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

தாசில்தார் கூறுகையில், “தாலுகா அலுவலகத்தில் கழிப்பறை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். வரும் கூட்டங்களில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விளக்கம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.“ என்றார்.

மேலும் செய்திகள்