கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வருவாய் துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:–
அரசு துறைகளில் அதிகப்படியான பணியிடங்களை கண்டறிந்து, அவற்றை குறைப்பதற்காக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் பல்வேறு துறைகளில் புதியதாக தேர்வு செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை குறையும்.
இதனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படும். எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.