50 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி ஆற்றில் இருந்து ரெட்டிராயர் குளத்திற்கு தண்ணீர் வந்தது

50 ஆண்டுகளுக்கு பிறகு கும்பகோணம் காவிரி ஆற்றில் இருந்து ரெட்டிராயர் குளத்திற்கு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2018-08-21 23:00 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 40-க்கும் அதிகமான குளங்கள் உள்ளன. இதில் 20 குளங்கள் மட்டுமே தற்பொழுது பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதில் கும்பகோணம் காவிரி ஆற்றின் தெற்கு பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் ரெட்டியர் குளம் உள்ளது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும். இந்த குளம் நிரம்பினால் அங்கிருந்து ஆதிவராக பெருமாள் கோவில் குளத்திற்கு தண்ணீர் விடப்படும். அதற்கு ஏற்ப 8 அடி அகலத்தில் கால்வாய் வெட்டப்பட்டு காவிரி ஆற்றில் அதற்காக மதகுடன் கூடிய ரெகுலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.

காலபோக்கில் ரெட்டிராயர் குளத்திற்கு வரும் வாய்க்கால் தூர்ந்து போனதால் அங்கு குப்பைகள் கொட்டப்பட்டு பயன்பாடில்லாமல் போனது. சில இடங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டன. இதனால் ரெட்டிராயர் குளம் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த 50 ஆண்டுகளாக காவிரி நீர் இந்த குளத்திற்கு வரவில்லை.

இந்தநிலையில் கடந்த வாரம் கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார் ரெட்டிராயர் குளம், வராக குளம், பொற்றாமரை குளம் ஆகியவற்றை பார்வையிட்டார். அதற்கான நீர்வழிப்பாதைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ரெட்டியார் குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டறிந்தார். உடனே ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் தன்னார்வ அமைப்புகள், அரசு அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 19-ந் தேதி ரெட்டிராயர் குளத்திற்கு தண்ணீர் வரும் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லின் எந்திரம் மூலம் அகற்றினர்.

இதனை தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு காவிரியில் இருந்து ரெட்டிராயர் குளத்திற்கு தண்ணீர் வந்தது. அப்போது அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. நகர செயலாளருமான ராம.ராமநாதன் கலந்து கொண்டு மலர்தூவி தண்ணீரை வரவேற்றார். கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் காவிரியில் இருந்து ரெட்டிராயர் குளத்திற்கு தண்ணீர் வந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்