கோயம்பேடு மார்க்கெட்டில் உடலில் காயங்களுடன் பெயிண்டர் பிணமாக மீட்பு

கோயம்பேடு மார்க்கெட்டில் உடலில் காயங்களுடன் பெயிண்டர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-08-21 22:15 GMT
பூந்தமல்லி,

சென்னை கோயம்பேட்டில் மிகப்பெரிய காய்கறி மற்றும் பழ மார்க்கெட் உள்ளது. இந்த நிலையில் பழ மார்க்கெட்டில் உள்ள மரத்தின் அடியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

இறந்து கிடந்தவரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. தொடர்ந்து போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கோயம்பேடு, சேமாத்தம்மன் நகர், 3–வது தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 42) என்பதும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் குடும்பத்துடன் இங்கு குடியேறியதும் தெரியவந்தது.

பெயிண்டர் வேலை செய்து வந்த ராஜேந்திரனுக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராஜேந்திரன் நேற்று முன்தினம் ஒருவருக்கு பணம் கொடுத்துவிட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் இரவு முழுவதும் அவர் வீட்டிற்கு வரவில்லை என தெரியவந்தது.

சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, குடிப்பழக்கம் உடைய ராஜேந்திரன் நேற்று முன்தினம் மதுபோதையில் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு படுத்துள்ளார். அதன் பிறகு அவர் எழுந்திருக்கவில்லை.

அந்த இடத்தில் வேறு யாரும் வந்து சென்றதற்கான எந்த வித தடயமும் இல்லை. ராஜேந்திரன் உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் எலி கடித்ததால் ஏற்பட்டது போல் உள்ளதாக தெரிகிறது.

ராஜேந்திரன் குடிபோதையில் நாக்கு வரண்டு இறந்தாரா? அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? என்பது தெரியவில்லை. எனினும் அவரது மரணம் மர்மமாகவே உள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே ராஜேந்திரன் எப்படி இறந்தார்? என்பது முழுமையாக தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்