கண்டாலா மலையில் இருந்து 400 அடி பள்ளத்தில் விழுந்த மத்திய ரெயில்வே அதிகாரி பலி

கண்டாலாவிற்கு சுற்றுலா சென்ற மத்திய ரெயில்வே அதிகாரி மலையில் இருந்து 400 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பலியானார்.

Update: 2018-08-20 23:52 GMT
மும்பை,

மும்பை மாட்டுங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோகன் மகாஜன் (வயது30). மத்திய ரெயில்வேயில் செக்சன் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் மத்திய ரெயில்வே ஊழியர்களுடன் லோனவாலா அருகே உள்ள கண்டாலா மலை வாசஸ்தலத்திற்கு சென்றார். இதில் அவர்கள் அங்குள்ள பிரபலமான டியுக் நோஸ் பாயின்ட் பகுதிக்கு சென்றனர்.

பிற்பகல் நேரத்தில் அவர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரோகன் மகாஜன் கால் வழுக்கி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்தார்.

இதுகுறித்து அவருடன் சென்ற ஊழியர்கள் போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு சென்ற மீட்பு படையினர் சுமார் 400 அடி பள்ளத்தில் படுகாயங்களுடன் கிடந்த ரோகன் மகாஜனை மீட்டனர்.

பின்னர் அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ரோகன் மகாஜனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து லோனவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்