வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

Update: 2018-08-20 23:21 GMT
திட்டக்குடி, 


திட்டக்குடியில் சோழர் மன்னர்களால் வைத்தியநாத சுவாமி கோவில் கட்டப்பட்டது. இந்த கோவிலில் வதிஷ்டர் தங்கி வழிப்பட்டார் என்பது தனிச்சிறப்பு. பழமை வாய்ந்த இந்த கோவில் முன்பு திருக்குளம் உள்ளது. இதில் பங்குனி மாதம் தெப்ப உற்சவம் மற்றும் ஆடிப்புர தீர்த்தவாரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அதன்பிறகு ஆக்கிரமிப்பாளர்கள் பார்வை திருக்குளத்தின் மீது பட்டது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குளத்தின் கரைகளை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து, வீடு மற்றும் கடைகளை கட்டினர். கழிவறைகளும் கட்டப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்குளத்தில் விழாக்கள் கொண்டாட வேண்டும் என்று ஆன்மிக அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அகற்ற இந்து சமய அறநிலையத்துறையினர் எடுத்த முயற்சிக்கு பல்வேறு தடைகள் ஏற்பட்டது. இதையடுத்து சிலர் ஒன்று சேர்ந்து சிவனடியார்கள் திருக்குளம் மிட்பு போராட்டக்குழுவை தொடங்கினர். அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திட்டக்குடி தாசில்தாரிடம் முறையிட்டனர்.

இதையடுத்து திருக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் மற்றும் கடைகளை வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர். பின்னர் இந்து சமய அறநிலையத்துறையும், வருவாய்துறையினரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றக்கோரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.இருப் பினும் அவர்கள் ஆக்கிர மிப்பை அகற்றி கொள்ள வில்லை. இதையடுத்து விருத்தாசலம் உதவி கலெக்டர் சந்தோஷினிசந்திரா, இந்து அறநிலைய துறையின் உதவி ஆணையர்கள் ரேனுகாதேவி, ஜோதி, திட்டக்குடி தாசில்தார் சத்தியன் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலையில் திருக்குளத்தை வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பின்னர் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, திருக்குள கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் அகற்றும் பணி தொடங்கியது. இதில் வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறுவர் பூங்காவும் அகற்றப்பட்டது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவில் திருக்குள கரையை ஆக்கிரமித்து 31 விடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளது. வீடுகள், கடைகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி முழுமையாக அகற்றப்படும் என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்க திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரக்குமாரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தயார் நிலையில் நின்றனர். 

மேலும் செய்திகள்