விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி சாவு
விழுப்புரம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 75), விவசாயி. இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் நிலம் உள்ளது. தற்போது அந்த நிலத்தில் கரும்பு பயிர் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பாண்டுரங்கன் தனது நிலத்திற்கு சென்றார். அங்கு கரும்பு தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தபோது மேலே சென்ற மின்கம்பி திடீரென அறுந்து பாண்டுரங்கன் மீது விழுந்தது.
இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட பாண்டுரங்கன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டுரங்கனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.