மழை குறைந்ததால் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு குறைப்பு

மழை குறைந்ததால், பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

Update: 2018-08-20 22:45 GMT

பொள்ளாச்சி,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர்மழையால், பரம்பிக்குளம், சோலையார், ஆழியாறு மற்றும் தொகுப்பு அணைகள் முழுகொள்ளளவை எட்டி உள்ளன. இதன் காரணமாக அணைகளின் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து கடந்த 35 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதேபோன்று ஆழியாறு அணையில் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை அளவு குறைந்து உள்ளது.

இதன் காரணமாக அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதையடுத்து அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 69.58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 536 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 316 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோன்று 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. அணைக்கு 3,021 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறைந்ததால் ஆழியாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இதையடுத்து காளியப்பகவுண்டன்புதூரில் இருந்து மீன்கரை ரோட்டில் உள்ள தரைப்பாலத்தின் கீழே தண்ணீர் செல்ல தொடங்கியது. இதனால் அந்த வழியாக ஒரு வாரத்திற்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) விவரம் வருமாறு:–

சோலையார் 19, பரம்பிக்குளம் 8.5, ஆழியாறு 6.2, வால்பாறை 11, மேல்நீராறு 23, கீழ்நீராறு 28, காடம்பாறை 5, சர்க்கார்பதி 5, வேட்டைக்காரன்புதூர் 4.60, மணக்கடவு 10.8, தூணக்கடவு 8, பெருவாரிபள்ளம் 9, அப்பர் ஆழியாறு 3, நவமலை 3 ஆகும்.

மேலும் செய்திகள்