குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி தீவிரம்

குன்னூர் காட்டேரி பூங்காவில் 2–வது சீசனுக்காக 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2018-08-20 22:15 GMT

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை கால சீசன் ஆகும். இந்த சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2–ம் சீசனாக உள்ளது. அந்த நாட்களிலும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து, இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான பயணிகள் முதலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வழியில் உள்ள காட்டேரி பூங்காவிற்கு செல்வது வழக்கம். அங்கு இயற்கை காட்சிகளை ரசித்துவிட்டு சிம்ஸ் பார்க், ஊட்டி தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்கின்றனர்.

தற்போது குன்னூர் பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் காட்டேரி பூங்கா பசுமை நிலைக்கு திரும்பி உள்ளது. இதையொட்டி 2–ம் சீசனுக்காக பூங்காவில் 1 லட்சத்து 50 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. அதில் சால்வியா, மேரிகோல்டு, டேலியா, பிரெஞ்சு மேரிகோல்டு, பால்சம் ஜினியா, டயான்தஸ் ஸ்டாக், வெர்பினா உள்பட 10–க்கும் மேற்பட்ட வகையை சேர்ந்த மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. இந்த பணியில் தோட்டக்கலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள புல் தரையை சமன்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

கோத்தகிரி காமராஜர் சதுக்க பகுதியில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோரத்தில் நேரு பூங்கா உள்ளது. இது 65 சென்ட் பரப்பளவில் ரோஜா பூங்கா, பசுமையான புல் தரைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவற்றுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா நடக்கும்போது முதல் நிகழ்ச்சியாக நேரு பூங்காவில் 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியில் காய்கறிகளை கொண்டு அமைக்கப்படும் விலங்குகள், குடில்கள், பறவையின உருவங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரு பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். மேலும் பூங்காவின் வளாகத்தில் உள்ள கோத்தர் இன மக்களின் அய்யனோர் அம்மனோர் கோவிலை காண ஆர்வம் அதிகரித்துள்ளதால், ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் 2–வது சீசனுக்காக ரோஜா பூங்காவில் செடிகளுக்கு கவாத்து செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் களை பறித்து சுத்தம் செய்வது, மலர் நாற்றுகள் நடவு, புல்தரைகளை சமன்படுத்தும் பணியும் நடக்கிறது. அதில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 2–வது சீசனையொட்டி நேரு பூங்காவில் பராமரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. சீசனுக்கு முன்னதாக பணிகள் அனைத்து நிறைவு பெற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தயாராக இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்