காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது அரசு பஸ்கள் சேதம்: பா.ம.க.வுக்கு நோட்டீஸ் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

காடுவெட்டி குரு மரணம் அடைந்த போது அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு இழப்பீடு வசூலிக்கக்கோரிய வழக்கில், பா.ம.க.வுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-08-20 22:45 GMT

மதுரை,

பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நெல்லையை சேர்ந்த சுந்தரவேல் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பா.ம.க.வை சேர்ந்த காடுவெட்டி குரு மே மாதம் மரணம் அடைந்த போது அவரது ஆதரவாளர்கள், அக்கட்சியை சேர்ந்தவர்கள் அரசு பஸ்கள் மீது கல் வீசினர். இதில் 73 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. அவை தற்போது இயங்குவதற்கு தகுதியற்றவையாக உள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்பை மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே காடுவெட்டி குரு இறந்த சமயத்தில் அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டை பா.ம.க.விடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தானா? என்பதை முடிவு செய்வதற்காக நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது மனுதாரர் ஆஜராகி, நான் ஏற்கனவே 2 வழக்குகள் தாக்கல் செய்துள்ளேன். அரசியலமைப்பின்படி பொதுநல வழக்கை யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை பட்டியலில் சேர்க்குமாறு ஐகோர்ட்டு பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து பா.ம.க.வுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்