கந்து வட்டி கேட்டு பூ வியாபாரியை மிரட்டிய வழக்கு: வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில்
கந்து வட்டி கேட்டு பூ வியாபாரியை மிரட்டிய வாலிபருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை,
நெல்லை டவுன் அனவரத விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 24). இவர் நெல்லையப்பர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார்.
இவர், தொழில் அபிவிருத்திக்காக நெல்லை டவுன் வையாபுரி நகரை சேர்ந்த ராஜா மகன் கணேசன் (27) என்பவரிடம் 15-10-2015 அன்று ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். வட்டியை தொடர்ந்து செலுத்தி வந்தார். இந்த நிலையில், கொடுத்த பணத்துக்கு கணேசன் கந்து வட்டி கேட்டு மிரட்டினார்.
இதனால் மனம்வெறுப்படைந்த சுப்பிரமணியன் விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இது தொடர்பான வழக்கு நெல்லை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமானந்தகுமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கந்து வட்டி கேட்டு மிரட்டிய கணேசனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ரவி ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார்.