ஓடும் லாரியில் டிரைவர் திடீர் சாவு சாலையோர பள்ளத்தில் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

ஓடும் லாரியில் டிரைவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். சாலையோர பள்ளத்தில் லாரி பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2018-08-20 22:45 GMT
நாகர்கோவில்,

விழுப்புரம் மாவட்டம் ஆரியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 57), லாரி டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விழுப்புரத்தில் இருந்து மதுபானங்களை ஏற்றிக் கொண்டு குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு சென்றார். அவருடன் கிளனரும் வந்தார். கேரளாவில் மதுபானங்களை இறக்கிவிட்டு மீண்டும் விழுப்புரத்துக்கு புறப்பட்டார்.

இந்த நிலையில் விஸ்வநாதன் ஓட்டி வந்த லாரி நேற்று அதிகாலை 2 மணி அளவில் நாகர்கோவில் அருகே கணியாகுளத்துக்கு வந்தது. பார்வதிபுரத்தில் பாலம் வேலை நடப்பதால் கனரக வாகனங்கள் இறச்சகுளம் வழியாக செல்கின்றன. ஆனால் விஸ்வநாதன் எதிர்பாராத விதமாக லாரியை கணியாகுளம் திருப்பத்தில் திருப்பிவிட்டார். கணியாகுளம் வழியாக வந்தால் பார்வதிபுரம் சந்திப்புக்கு வந்துவிடும். எனவே சுதாரித்துக் கொண்ட விஸ்வநாதன் லாரியை நிறு த்திவிட்டார். பின்னர் லாரியை பின்நோக்கி இயக்கி மீண்டும் இறச்சகுளம் சாலையில் இணைய விஸ்வநாதன் முடிவு செய்தார்.

அதன்படி லாரியை பின்நோக்கி இயக்கினார். ஆனால் அப்போது அங்கு துரதிஷ்டமான சம்பவம் நடந்துவிட்டது. அதாவது லாரி பின்நோக்கி வந்துகொண்டிருந்தபோது திடீரென விஸ்வநாதனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சுவிடவே அவர் சிரமப்பட்டார். இதனால் லாரியை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்து லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது லாரியில் இருந்த கிளனர் அலறினார்.

லாரி பள்ளத்தில் பாய்ந்து நின்றதும் கிளனர் வேகமாக கீழே இறங்கினார். ஆனால் விஸ்வநாதன் லாரியில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கிளனர் மீண்டும் லாரிக்குள் சென்று பார்த்தபோது ஸ்டேரிங்கில் தலை வைத்தபடி விஸ்வநாதன் பிணமாக கிடந்தார். நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் லாரியிலேயே இறந்தது தெரியவந்தது.

பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். நடந்த சம்பவத்தை கிளனர் மூலம் போலீசார் அறிந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து விஸ்வநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடைய விஸ்வநாதன் உயிரிழந்தது குறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பிணவறையில் வைக்கப்பட்டு இருந்த விஸ்வநாதனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். ஓடும் லாரியில் நெஞ்சுவலி ஏற்பட்டு டிரைவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்ததால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏன் எனில் நாகர்கோவிலுக்கு வரவேண்டிய மற்றும் நெல்லை மாவட்டம் நோக்கி செல்ல வேண்டிய அனைத்து விதமான வாகனங்களும் அந்த வழியாகத்தான் செல்கின்றன. அரசு பஸ்களும் அந்த வழித்தடத்தில் தான் இயக்கப்படுகிறது. ஒருவேலை கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிர்பாராத விதமாக வேறு ஏதேனும் வாகனங்கள் மீது மோதி இருந்தால் கண்டிப்பாக அதிக உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

ஆனால் லாரி பின்நோக்கி சென்று பள்ளத்தில் பாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்