ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் உள்ளிருப்பு போராட்டம்
ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வேடசந்தூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை வட்டாரக்கல்வி அலுவலராக பணியாற்றுபவர் அருண்குமார். இவர் ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஆய்விற்கு சென்றபோது பள்ளியில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், அருண்குமாரையும் அவரோடு பணியாற்றும் ஒரு பெண்ணையும் சேர்த்து போலியான புகைப்படம் வெளியிட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் ஆர்.கோம்பை பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் அந்தோணிதாஸ், குஜிலியம்பாறை வட்டார செயலாளர் அருள்செழியன் மற்றும் ஆசிரியர் கூட்டணியில் உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்தை சேர்ந்த ஆசிரியர்கள் வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆர்.கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் கல்வி மாவட்ட அலுவலர் பிச்சைமுத்து அலுவலகத்தில் இல்லை. வேறு பணிக்காக சென்றுவிட்டார். இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார் அங்கு வந்து ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதற்கு ஆசிரியர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு இரவு 9 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிநாத், வேடசந்தூர் கல்வி மாவட்ட அலுவலர் பிச்சைமுத்து ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகளிடம் ஒரு வாரத்திற்குள் உங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி சமரசம் செய்தனர். அதன் பிறகு ஆசிரியர்கள் இரவு 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் வேடசந்தூரில் நேற்று பரபரப்பு ஏற்ப்பட்டது.