மூதாட்டியிடம் நகை மோசடி செய்த 2 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே பாலீஷ் போடுவது போல நடித்து, மூதாட்டியிடம் நகை மோசடி செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டியை அடுத்த க.விலக்கு அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரசன். அவருடைய மனைவி அன்னத்தாய்(வயது 65). நேற்று முன்தினம் மாலை இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர். இதனை நம்பிய அவர், தனது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து அந்த வாலிபர்கள், தாங்கள் கொண்டு வந்த திரவத்தில் நகையை போட்டனர். சிறிதுநேரத்தில் மீண்டும் அந்த நகையை அன்னத்தாயிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அதன்பின்னர் நகையின் எடை குறைந்திருப்பதை கண்ட அன்னத்தாய் அதிர்ச்சி அடைந்தார். நகையை எடை போட்டு பார்த்தபோது 2 பவுன் குறைவாக இருப்பது தெரியவந்தது.
பாலீஷ் போடுவது போல நடித்து நகை மோசடியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து க.விலக்கு போலீஸ் நிலையத்தில் அன்னத்தாய் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று காலை குன்னூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலம் ரகுநாத்பூரை சேர்ந்த பிம்தேவ்பால் (27), சஞ்சீவிகுமார் (21) என்று தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் சேர்ந்து அன்னத்தாயிடம் நகை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை பாலீஷ் போடுவதற்கு வைத்திருந்த திரவம் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.