கேரளாவிற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள்

வேலூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை கலெக்டர் ராமன் இன்று அனுப்பி வைக்கிறார்.

Update: 2018-08-19 22:28 GMT
வேலூர்,


கேரள மாநிலத்தில் வரலாறு காணாத கனமழை கடந்த சில நாட்களாக பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்தனர். வீடுகளை இழந்த பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கனமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு பல்வேறு மாநில அரசுகள் நிவாரண நிதி அளித்து வருகின்றன. மேலும் நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட பல்வேறு அமைப்புகளும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், “கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வேலூர் மாவட்டத்தின் மூலம் நிவாரண பொருட்கள் அளிக்கப்பட உள்ளது என்றும், அவை ‘ரெட் கிராஸ்’ சங்கம் மூலம் அனுப்பி வைக்கப்படும்” என்றும் கலெக்டர் ராமன் தெரிவித்தார். நிவாரண பொருட்கள் அளிக்க விரும்புபவர்கள் ‘ரெட் கிராஸ்’ சங்க அலுவலகத்தில் நேரடியாக கொடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.

இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போர்வைகள், வேட்டி, சேலை, பாய் உள்பட பல்வேறு பொருட்களை வழங்கி வருகின்றனர். நிவாரண பொருட்கள் அனைத்தும் வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ‘ரெட்கிராஸ்’ சங்க அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சேர்ந்துள்ளன. அவை முதற்கட்டமாக இன்று (திங்கட்கிழமை) லாரிகள் மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கேரளாவிற்கு அனுப்பப்பட உள்ள நிவாரண பொருட்கள் குறித்து ‘ரெட் கிராஸ்’ சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

‘ரெட் கிராஸ்’ சங்க அலுவலகத்தில் 200 அரிசி மூட்டைகள், 2 ஆயிரம் சேலைகள், 2,500 போர்வைகள், 500 வேட்டிகள், 500 பாய்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உள்ளன. இவை அனைத்தும் முதற்கட்டமாக 20-ந் தேதி (இன்று) லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை, மருத்துவ விற்பனையாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் சங்கங்கள் சார்பிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் அளிக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு முதற்கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் ‘ரெட் கிராஸ்’ சங்க அலுவலகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை மாவட்ட ‘ரெட் கிராஸ்’ சங்க தலைவரும், வேலூர் மாவட்ட கலெக்டருமான ராமன் பார்வையிட்டார். அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்தும், முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட உள்ள நிவாரண பொருட்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது ‘ரெட் கிராஸ்’ சங்க செயலாளர் இந்தர்நாத் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்