வருகிற 1-ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார் அமைச்சர் தகவல்

மன்னார்குடியில் வருகிற 1-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார் என அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

Update: 2018-08-19 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காவிரி நீர் பிரச்சினையில் சட்டபோராட்டம் நடத்தி வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னார்குடி தேரடி திடலில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வருகிற 1-ந் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் நோக்கில் முன் கூட்டியே ஆறுகளில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பா சாகுபடிக்கு முன் கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கான ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விதிமுறைகள் படியே நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பொது வினியோக திட்டத்தின்கீழ் வழங்கும் பொருட்களை கண்காணித்து வருகின்றனர். பாசன ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மட்டுமல்லாது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள பாதிப்பிற்கு இதுவரை தமிழக முதல்-அமைச்சர் ரூ.10 கோடி நிவாரண நிதி அளித்திருக்கிறார். பொது வினியோக திட்டம் முழுமையாக கணினி மயப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த சேவை மக்களுக்கு கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள தேரடி திடல் மைதானத்தை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்செல்வம், தமிழ்கண்ணன், முன்னாள் நகரசபை தலைவர் சுதா அன்புசெல்வன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் குமார், தொகுதி செயலாளர் கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்